தெரியாமல் தவற விட்ட பொய் ஒன்று
என் வீட்டு வாசலில் ஒரு நாள்
சிறு முட்செடியென முளைத்து நின்றது.

தானே வாடி இறந்து விடும் என்றெண்ணி
களையெடுக்காமல் விட்டுவிட்டேன்.
இரவில் அது மெதுவாக வளர துவங்கியது.

என்னையும் தாண்டி வளர்ந்திருப்பதைக் கண்டு
பதறி அதை வெட்டியெடுக்க முயன்றேன்.
நெருங்க விடாமல் தடுத்தன நீண்ட முட்கள்.

படிப்படியாக அந்த பொய்மரம் வளர்ந்து எழ
அதன் வேர்கள் என் நிலமெங்கும் படர்ந்தன
வீட்டைச்சுற்றி முட்செடிகள் தோன்றின.

என் வீட்டுக்குள் நானே சிறைக்கைதி ஆனேன்.
தப்பிக்க முடியாமல் தவித்திருந்த இரவில்
ஒரு கிளை என் ஜன்னலை உடைத்து நுழைந்தது

"பார்த்தாயா உன் அழகான பொய்மரத்தோட்டத்தை?" என்றது.